ரொம்ப சந்தோசமாய் இருக்கு. தனியே ஆரம்பித்து அதன் பின் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து இப்போது பல பதிவுலக நண்பர்களின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக பதிவுலகம் நம் தமிழ் திரையுலகுக்கு விருது வழங்கும் சிறப்பான தருணத்துக்காக போட்டியிடும் திரை நட்சத்திரங்களை அறிவிக்கும் பதிவில் உங்களை சந்திக்கின்றோம். கடந்தமுறை என் தனிப்பட்ட வலைப்பூவில் வாக்களிப்புகள் இடம்பெற்றாலும் இம்முறை நாம் பலர் ஒன்றாக இணைவதால் இதற்காக புதிய ஒரு வலைப்பூவை வடிவமைத்து அதில் வாக்களிப்புக்களை நடத்த உள்ளோம். அழகான வலைப்பூவில் பாதுகாப்பான முறையில் இந்த வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.
கடந்தமுறை தெரிவுகள் நான் தனியே தெரிவு செய்தேன் அங்கேயே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்கவில்லை. இப்போது குழுவாக இயங்குகையில் மட்டும் அது சாத்தியமா? தெரிவுகளுக்காக முட்டி மோதினோம். இறுதி நேரத்தில் இல்லை இது சரியில்லை ஏற்கமுடியாது என்று எங்களுக்குள் வாக்குவாதப்பட்டோம். இதனால் நீங்கள் எதிர்பார்த்த தெரிவுகளை கொடுத்ததாக நம்புகின்றோம்.
கடந்த சில நாட்களாக இதை பற்றிய கலந்துரையாடலை ஆரம்பித்த நாம் அதன் முன்னோட்டமாக முதலில் இதற்கான லோகோ ஒன்றை தயார் செய்தோம். இன்று உங்கள் வலைப்பூக்களை அது அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பின்னர் எங்கள் முதல் பதிவை முன்னோட்டமாக இட்டோம் காரணம். எம்முடன் கை கோர்க்க விரும்பும் நண்பர்களை நாங்கள் தவற விடக்கூடாதே. தங்களுக்கு இது தெரியாதென்றும் யாரும் சொல்லி விடக்கூடாது என்ற முன் யாக்கிரதையும். அதே நேரம் இப்படி ஒரு முயற்சி எடுக்கையில் பல எதிர் மறையான விமர்சனங்கள் வரும் என்பதும் எங்களுக்கு தெரியும். இதுவரை அப்படி எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை என்பது சந்தோசம். சிலர் தங்கள் பின்னூட்டம் வாயிலாக வாழ்த்தும் ஆதரவும் சொன்னதோடு, எம் குழுவில் ஆரம்பத்தில் இருந்த பதிவர்களும் அதன் பின் எங்களுடன் இணைந்து கொண்ட ஆடுகளம் அனுதினன், அவுஸ்திரேலியாவில் இருந்து பதிவிடும் தமிழ் மதுரம் கமல், மனதில் தெறித்த சாரல்கள் மதுரகன், இந்தியாவின் ரசிகன் சௌந்தர், இங்கிலாந்தில் இருக்கும் பங்குச் சந்தை அச்சுதன் போன்றோர் (யாராவது தவற விடப்பட்டிருந்தால் மன்னிக்கவும்) தங்கள் பதிவுகளை எங்கள் இந்த முயற்சி பற்றி இட்டு மிகப்பெரிய ஆதரவை வழங்கி வருகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதே நேரம் பின்னூட்டம் மூலம் எங்களை வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றிகள்.
வாக்குகளில் நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக இயலுமானவரை பாதுகாப்பான ஒரு முறையை கையாள்கின்றோம். அந்த வகையில் இன்று முதல் நீங்கள் உங்கள் தெரிவுகளை மேற்கொண்டு உங்கள் விருப்பமானவர்களியும் திறைமை சாலிகளையும் வெல்ல வையுங்கள். உங்களை கவர்ந்தவர் தோற்றுப்போக விடுவீர்களா என்ன?
தெரிவுகளை பொறுத்தவரை கடந்த வருடம் ஜூன் மாதம் தொடக்கம் இந்த வருடம் மே மாதம் வரை(சிங்கம் படத்தை இதில் சேர்க்கவில்லை காரணம் வெளிவந்து ஒரு சில நாட்களே ஆகி இருப்பதால்.) வெளிவந்த படங்கள் பாடல்களை அடிப்படையாக வைத்தே இந்த தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இதோ படியுங்கள் போட்டியிடும் நட்சத்திரங்களை அதன் பின் வாக்களியுங்கள் உங்கள் நட்சத்திரங்களுக்கு
சிறந்த நடிகர்
இந்த வகையின் கீழ் நாங்கள் தெரிவு செய்தது குறித்த காலத்தில் தங்கள் நடிப்பை வித்தியாசமாக காட்டிய நடிகர்களை. அந்த வகையில் உன்னை போல் ஒருவன் திரைப்படம் மறக்க முடியாத ஒரு திரைப்படம். கமல் தன வழக்கமான பெரிய உருவ மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்த இடத்தில் இருந்து கொண்டே நடிப்பால் ஓட வைத்த படம். எனவே இந்த வகையில் போட்டியிடும் ஒருவராக கமலை தெரிவு செய்துள்ளோம். அடுத்தவர் ஜெயம் ரவி. சாக்லட் பாய்,சில படங்களில் அதிரடி நாயகன் என வந்தவர் முற்றிலும் வித்தியாசமாய் துணிந்து நடித்து வெற்றியும் பெற்ற படம் பேராண்மை. இளம் நடிகர்களில் அற்புதமான முயற்சி செய்து அபாரமாக நடித்தவர். இந்த வகையில் உங்கள் வாக்குக்காக இங்கே போட்டி இடுகின்றார். அடுத்தவர் கார்த்தி. ஆயிரத்தில் ஒருவனில் இந்த படத்தை தாங்கிப்பிடித்து நடித்த ஒரு நல்ல நடிகர் என்ற வகையில் அவரும் ஒரு போட்டியாளர் ஆக இதே படத்தில் தன அற்புதமான நடிப்பாற்றலால் சரித்திரப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்த பார்த்தீபனும் போட்டியிடுகின்றார். மறு பக்கம் தன விரல் வித்தை வீண் பன்ச் எல்லாம் விட்டு இளைய நடிகர்களுக்கு நல்ல ஒரு உதாரணம் காட்டி வெறுத்தவர்களும் ரசித்த விண்ணை தாண்டி வருவாயா படம் கொடுத்த சிம்பு ஆகியோர் போட்டி இடுகின்றனர். உங்கள் வாக்குகளே தீர்மானிக்கப்போகின்றன. யார் சிறந்த நடிகர் என்பதை.
சிறந்த நடிகை.
கடந்த வருடம் நடிப்பில் நடிகைகளும் அசத்த தவறவில்லை. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ச்சி என்றாலும் சரி நடிப்பென்றாலும் சரி தூக்கி சுமக்க தான் சரியானவர் என நிரூபித்த ரீமா சென் இங்கே போட்டி இடுகின்றார். மறுபக்கம் ஜெசியாக வாழ்ந்து காட்டி இப்பிடி ஒரு காதலி கிடைக்கமாட்டாளா என ஏங்கவைத்த திரிஷா, மறுபுறம் யதார்த்தத்தைக் காட்டிய அங்காடித் தெரு அஞ்சலி பெரிதாக பிரபலம் இல்லாவிட்டாலும் இம்முறை கடுமையான போட்டியைக்கொடுப்பார் என எதிர்பார்கப்படுகிறது. இவர்கள் இப்படி இருக்க முழு மசாலா படங்களில் கூட தங்கள் நடிப்பை காட்டிய இன்னும் இரண்டு நடிகைகளும் இங்கே போட்டி இடுகின்றார்கள். கவர்ச்சியை பிழிந்து காட்டியதுடன் வில்லத்தனமாக நடித்த ஸ்ரேயா மற்றும் இந்த காலப்பகுதியில் அதிக படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழும் தமன்னா ஆகியோர் இங்கே போட்டி இடுகின்றனர். கண்டேன் காதலை, பையா என இவர் படங்கள் அமைகின்றன. இதில் பையா பட கதாபாத்திரம் பலரால் ரசிக்கப்பட்ட ஒன்று. உங்களை கவர்ந்து சிறந்த நடிகையாக தெரிவாகப்போவது யார். வாக்களித்து முடிவை நீங்களே தீர்மானியுங்கள்
சிறந்த வில்லன்.
பயம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டே பயப்படுத்திய வேட்டைக்காரனில் நடித்த சலீம் கெளசுடன், கந்தசாமி படத்தில் சாதாரணமாய் வந்து வில்லத் தனம செய்த கிருஷ்ணா மற்றும் மலை மலையில் மோதிய பிரகாஷ்ராஜ் இவர்களோடு வாமணனில் கலக்கிய ரகுமான் ஆகியோர் போட்டி இடுகின்றனர். கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் வில்லன்கள் பவர் குறைவே.
சிறந்த நகைச்சுவை நடிகர்.
நகைச்சுவை நடிகர்களில் இந்த மனிதர் ஒரு சில படங்களில் அசத்தி இருப்பார். வெடுகுண்டு முருகேசனில் பசுபதியுடனும், ஆதவன் படத்தில் தனி ஆவர்த்தனமும் நடத்தி இருப்பார் வடிவேல். மறுபுறம் கண்டேன் காதலை மலை மலை என தன் பங்குக்கு சந்தானம் விறு விறு என முன்னேறி வருகின்றார். கோவாவில் பிரேம்ஜி அமரன் நகைச்சுவையை கொடுக்க மாசிலாமணி, தமிழ் படம் போன்றவற்றில் கலக்கிய எம்.எஸ்.பாஸ்கரும் இம்முறை கோதாவில் இறங்கி உள்ளார். ஜெயிக்கப்போவது யார்? முடிவு உங்கள் கையில் .
சிறந்த இசையமைப்பாளர்.
இவர்களை பொறுத்தவரை ஆஸ்கார் விருது பெற்ற பின் தமிழில் முதன் முதலாய் இசை அமைத்த விண்ணை தாண்டி வருவாயா படத்துக்காக பரிந்துரைக்கப்படுகின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இவரை தொடர்ந்து ஒரு பெரிய படத்துக்கு அற்புதமாய் இசை கொடுத்த மருமகன் ஜி.வி. பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன்,அங்காடி தெரு(நான்கு பாடல்கள்) போன்ற படங்களுக்காகவும், யுவன் சங்கர் ராஜா தான் இசை வழங்கிய வாமணன், பையா,கோவா போன்ற படங்களுக்காக பரிந்துரைக்கப்படும் அதே நேரம், நடிகராக அவதாரம் எடுக்கும் விஜய் அன்டனியோ அங்காடித்தெரு,நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன் போன்ற படங்களில் அதிரடி இசையை கொடுத்து தன்னையும் இங்கே கொண்டு வந்து விட்டார். பாடல்கள் படத்தில் இல்லாவிட்டாலும் தன இசையால் அசத்திய கமலின் மகள் சுருதி ஹாசன் உங்கள் பார்வையில் நல்ல இசை அமைப்பாளரா? வாக்களிக்க தயாராகுங்கள். இல்லையேல்ஆதவன் படத்துக்காக ஹரிஷ் ஜெயராயும், படங்கள் சொதப்பினாலும் குட்டி,கந்தசாமி போன்ற பட பாடல்கள் ரசிக்க முடிந்தவை ஹிட் ஆனவை என நீங்கள் எண்ணினால் தேவி ஸ்ரீ பிரசாத்தை வெற்றி பெற வையுங்கள். வெல்லப்போகும் இசை அமைப்பாளர் யார். காத்திருங்கள் முடிவுகளுக்காக.
சிறந்த பாடலாசிரியர்.
தாய் தின்ற மண்ணே என்ற உணர்ச்சி நரம்புகளை புடைக்க வைக்கும் பாடல் ஒன்றே இவரை தூக்கி வந்து இங்கே இருத்தி இருக்கிறது. அவர் தான் வைர வரிகளுக்கு சொந்தமான வைரமுத்து. அதேநேரம் குத்து பாடல்களை அதிகம் எழுதும் கபிலன் கூட அடக்க ஒடுக்கமாக எழுதிய ஆதவனில் இடம்பெற்ற வாராயோ வாராயோ மற்றும் அங்காடித் தெரு பட பாடலான உன்னை காதலி என்று சொல்லவா பாடல்கள் மூலம் உள்ளே வந்து விட்டார். மறுபுறம் விவேகா கந்த சாமி பட பாடல்களுக்காகவும் வேட்டைக்காரனின் சின்னத் தாமரைக்காகவும் ஈரத்தில் நெஞ்சங்களை ஈரமாக்கிய மழையே பாடலுக்காகவும் கந்த கோட்டை பட பாடலான எப்படி என்னுள் காதல் வந்தது பாடல்கள் மூலம் நிலையாக உள்ளே வந்துள்ளார். மறுபுறம் காதல் பாடல்களால் கவரும் நா.முத்துக்குமார் இம்முறை அன்காடித்தெருவில் இடம்பெற்ற மூன்று பாடல்களான உன் பேரை சொல்லும் போதே, கதைகள் பேசும்,அவள் அப்படி ஒன்றும் போன்ற இனிய பாடல்களால் போட்டியில்.கவிதாயினி தாமரையோ இனிமையான உணர்வுகளோடு கதை பேசும் பாடல்களை எழுதுபவர் நாணயத்தில் நான் போகிறேன் மேலே மேலே என பெண்களின் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு விண்ணை தாண்டி வருவாயாவிலும் பாடல்களை எழுதி போட்டியாளராகி விட்டார். உங்களை வரியால் கவர்ந்தவர் எவரோ அவரே இம்முறை சிறந்த பாடலாசிரியர்.
சிறந்த பாடகர்.
ஆண் பாடகர்களை பொறுத்தவரை கடந்த வருடத்தில் தான் பாடிய எல்லா பாடல்களையும் ஹிட் ஆக்கிய கார்த்திக் கடுமையான போட்டியை எல்லோருக்கும் வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம். ஆதவனில் ஹசிலி பிசிலி, ஆயிரத்தில் ஒருவனில் ஓ ஈசா, பையாவில் சுத்துதே சுத்துதே, விண்ணை தாண்டி வருவாயாவில் விண்ணை தாண்டி வருவாயா, சுறா சிறகடிக்கும் நிலவு என இவர் ஹிட். மொழியே இல்லாமல் அர்த்தமே இல்லாவிட்டாலும் இதமாய் ஓ மகாசீயா என பாடிய ஹரிஹரன் இசையமைப்பாளராய் அவதாரம் எடுத்து பாடிய மோதி விளையாடு, கண்டேன் காதலை படத்தில் சுத்துது சுத்துது பாடல்கள் இவர் இங்கே வரக் காரணம், ஆதவனில் இடம் பெற்ற வாராயோ வாராயோவுக்காக உன்னி கிருஷ்ணன், வேட்டைகாரனில் இடம் பெற்ற சின்ன தாமரைக்காக கிரிஷும், விண்ணை தாண்டி வருவாயாவில் இடம்பெற்ற கண்ணுக்குள் கண்ணை வைத்து பாடலுக்காய் நரேஷ் ஐயரும், ஈரம் படத்துக்கு மழையே மழையே என பாடிய ரஞ்சித்தும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தாய் தின்ற மணி பாடிய விஜய் யேசுதாஸும், என ஒரு பெரும் பட்டாளமே களத்தில் குதித்திருக்கின்றது. வெற்றி யார் கையில் என்பது உங்கள் கையில்.
சிறந்த பாடகிகள்
இந்த வகையில் போட்டி எப்படி இருக்கப்போகின்றது என்பது எங்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான கேள்விதான். விண்ணை தாண்டி வருவாயாவில் மன்னிப்பாயா பாடலும் அங்காடித் தெருவில் இடம்பெற்ற உன் பேரை சொல்லும் போதே போன்ற பாடல்களால் இங்கே இடம் பிடிக்கின்றார் ஸ்ரேயா கோஷல், மறுபுறம் வகை வகையாய் பாடல்களை பாடும் சுசித்ரா சின்னத்தாமரைக்காகவும் கந்தசாமியின் excuse me பாடலுக்காகவும் உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கின்றார். பெண்களை கவரும் பாடல்களான நான் போகிறேன் மேலே என நாணயப்பட பாடலை பாடிய சித்ராவும் அசலில் துஷ்யந்தாவை அளித்த சுமுர்கியும் போட்டியிட உங்களை ஆட வைத்த என் உச்சி மண்டை பாடலுக்காய் சாருலதா மணியும் அமைதியான ஒரு பாடலாக பொக்கிஷத்துக்காக நிலா நீ என பாடிய சின்மயியும் கடுமையான போட்டி ஒன்றுக்காய் தயாராகி உள்ளனர்.
ஆதிக்க நாயகர்கள்.
இந்த வகை நாங்கள் தெரிவு செய்யக்காரணம் நீங்கள். போட்டி என்று வந்தால் இவர்கள் நால்வரும் இல்லாமல் இருக்குமா. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் வழக்கமாய் சில வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இந்த வகையில் அடங்கும் மூவரும் இம்முறை அதை மருந்துக்கும் தொடவில்லை. அதே நேரம் இவர்கள் நடித்த படங்கள் இந்த வருடம் மெஹா ஹிட் என சொல்லவும். முடியாது. திரை ரசிகர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான படத்தை இவர்கள் கொடுக்கவும் இல்லை. அதேநேரம் இவர்கள் இல்லாமல் திரை உலகமும் இல்லை என்ற நிலை இருக்கின்றது. கடந்த கால கட்டத்தில் தொடர் வெற்றிகளை குவித்துக் கொண்டு வந்த சூர்யா கொஞ்சம் சென்டிமென்ட்,காதல்,நகைச்சுவை என்று கலந்து கட்டிக் கொடுத்த ஆதவன் கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் உங்களுக்கு அவர் சிறந்த பொழுது போக்கு படத்தை கொடுத்ததாக தோன்றினால் உங்கள் வாக்கு அவருக்கே. அடுத்தவர் தல, கடந்த வருடம் இவர் நடித்து வந்த படம் அசல், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஏகன் அடியை தொடர்ந்து வந்த படம். ஓரளவுக்கு சிலரை திருப்திப்படுத்தினாலும் எல்லோரும் பாராட்டும் படி இந்தப்படமும் அமையவில்லை. ஆனால் அசல் உங்களை அசத்தி இருந்தால் நீங்கள் தலைக்கு வாக்களிக்கலாம். அடுத்தவர் விக்ரம். படம் வெளிவருவதோ நீண்ட நாட்களுக்கு ஒருதடவை. வரும் படங்களுக்கு ஏமாற்றினால் திரை உலகுக்கு அது இழப்பே. காரணம் மிகப்பெரிய தயாரிப்பில் அதிர்பார்ப்பில் வந்த திரைப்படம் பதிவர்களின் விமர்சன விளையாட்டாலும் எதிர்பார்ப்பை பூரணமாக பூர்த்தி செய்யாததாலும் மிகச்சிறந்த படம் என்ற தகுதியை இழந்தது. இந்த படத்தில் விக்ரம் உங்களை சந்தோசப்படுத்தி இருந்தால் இவர் தான் இந்த வருடத்தின் இந்த வகையில் வெற்றியாளர். அடுத்தவர் விஜய். கடந்த ஐந்து படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறாமல் போனது மட்டுமன்றி ஒரே மாதிரிப்படங்களை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இன்று நஷ்ட ஈடு கேட்கும் நிலைக்கு கூட தள்ளப்பாடுள்ளார். போதாத காலத்தில் ஒரேமாதிரிப் படங்களை கொடுத்து சலிப்படைய வைத்தாலும் வேட்டைக்காரன் சுறா என்ற இரண்டு படங்களும் உங்களை கவர்ந்திருந்தால் விஜய் சிறந்த பொழுது போக்கு நடிகர் என நீங்கள் எண்ணினால் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
பொதுவாக இந்த நால்வரையும் பார்க்கும் போது தமிழ் சினிமாவின் இப்போதைய இளைய முன்னணி நடிகர்கள். இவர்கள் நால்வரையும் தவிர்க்க முடியாது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வெற்றி என பல செல்வாக்கு உடையவர்கள். இவர்களின் பட வெற்றி தோல்வி தமிழ் சினிமாவில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் நேரத்தில் இந்த நால்வரின் சறுக்கல் நிலையிலும் இவர்களின் வெற்றி தோல்வியினால் திரை உலகில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் என வாக்களியுங்கள்.
சிறந்த இயக்குனர்.
இந்த வகையில் கடுமையான ஒரு போட்டி எதிரபார்க்கப்படுகின்றது. அதே நேரம் போட்டியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இதுவும் ஒன்று. நாடோடிகள் என்ற ஒரு படம் ஓடிய ஓட்டம் எல்லோருக்கும் தெரியும். இதன் இயக்குனர் சமுத்திரக்கனியுடன் உன்னை போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான பாடல்கள் திரையில் இல்லாத படத்தைக் கொடுத்த சக்ரி போட்டியிடுகின்றார். ஆயிரத்தில் ஒருவன் என்ற சரித்திரப்படத்தை எடுத்து பல உண்மைகளை சொன்ன செல்வராகவன் இயக்குனராக இங்கே போட்டியிட ஏற்கனவே அற்புதமான படங்களை கொடுத்த ஜனநாதன் பேராண்மை என்னும் தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான ஒரு படத்தைக் கொடுத்தார். வாழ்வியலோடு பொருந்திய படங்களை தரும் வசந்தபாலன் அங்காடித் தெரு மூலம் தன பெயரையும் இங்கே கொண்டுவர ஆவிகள் பற்றிய ஒரு திரில்லர் படம் எடுத்த அறிவழகன் மற்றும் காதலை அற்புதமாக சொல்லி தன்னை நிரூபிக்கும் கெளதம் மேனன் ஆகியோருடன் ரேணி குண்டா இயக்குனர் பன்னீர் செல்வமும் இம்முறை களத்தில் குதித்துள்ளனர்.
சிறந்த படம்.
இந்த வருடத்தில் இறுதியான தெரிவு. யதார்த்தத்தின் உருவமாக நட்பையும் சொன்ன படமான நாடோடிகள், சரித்திரத்தை சொன்ன படமான ஆயிரத்தில் ஒருவன், படங்களை பஞ்சராக்க வந்த தமிழ் படம், மெல்லிய காதலை மனதோடு சொல்லிய விண்ணை தாண்டி வருவாயா? ஆவிகளை மீண்டும் ஒரு தடவை கூட்டி வந்த ஈரம், கமலின் இன்னொரு முயற்சியில் வந்த உன்னை போல் ஒருவன், குறிப்பிட்ட பிரதேச தொழிலாளரின் வாழ்வை சொன்ன அங்காடித்தெரு, புதுமுகங்கள் அசத்திய ரேணிகுண்டா படங்கள் சிறந்த படத்துக்கான தெரிவில். உள்ளன.
தெரிவுகளும் தந்தயிற்று இனி வாக்களித்து வெற்றியாளரை தெரிவு செய்யப்போவது நீங்கள் தான். இதை பற்றிய அறிவிப்பை நாங்கள் வெளியிட்ட உடனேயே உங்கள் ஆதரவை தந்த அத்தனை நல உள்ளங்களுக்கும் நன்றிகள். Face book இல் இதற்கான ஒரு குழுமம் இட்டு நண்பர்களை சேர்த்த வேளை கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் சேர்ந்து இந்த முயற்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவை தந்துள்ளனர். நீங்களும் சேர விரும்பின் கீழுள்ள லிங்கை தொடருங்கள்.
எங்கள் கடின உழைப்பில் இதை ஆரம்பித்திருக்கின்றோம். பல பிரபலங்கள் கூடி இருக்கின்றார்கள். இந்த முடிவுகளை திரை உலகமும் எதிர்பார்க்கலாம் காரணம் பதிவர்களாகிய நாங்களும் நீங்களும் இன்று மிகப்பெரிய சக்தியாக உருவாகி இருப்பதால். இப்போது முதல் வாக்குகளை நீங்கள் செலுத்தலாம். உங்களுக்காக 3 வாரங்கள் இருக்கின்றன. உங்கள் மனம் கவர்ந்தவர், உங்கள் நட்சத்திரம் வெல்ல வேண்டுமா. வாக்களியுங்கள். கள்ள வாக்கு போடணுமா? முடியவே முடியாது. எனவே நம்பகத் தன்மையான ஒரு வாக்கெடுப்பு இது என்பதை உறுதியாக சொல்கின்றோம். ஒன்று பட்டு சாதிக்க உங்கள் ஆதரவையும் வேண்டுகின்றோம்.
பதிவுலக நண்பர்களே,
இங்கே நாங்கள் உங்களுக்கு இந்த வாக்கெடுப்பு பற்றிய விபரம் சொல்லும் லோகோ பல தந்துள்ளோம். உங்கள் வலைப்பூக்களிலும் இதை சேர்த்து எங்களை ஆதரிக்கவும். இது தனியே இலங்கை பதிவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா நாட்டு பதிவர்களும்
கரம் கோர்க்கலாம். திரை உலகுக்கும் பதிவுலகுக்கும் பாலம் அமைப்போம்.
இங்ஙனம்,
ஏற்பாட்டுக்குழு.